
மான்செஸ்டர்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடரில் இருந்து நிதிஷ் குமாரும், 4-வது போட்டியில் இருந்து ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகி உள்ளனர்.
நிதிஷ் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரும், ஆகாஷ் தீப்புக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஜூல் கம்போஜ் இடம் பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இருப்பினும் ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவரை முடிவு செய்வோம் என்றும் கில் குறிப்பிட்டார்.
மேலும் 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயரின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. 6 இன்னிங்சில் ஆடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் தீவிர பரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா:
ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், அன்ஜூல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா.